பதிவு செய்த நாள்
29
மே
2013
11:05
திருச்சி: குருப்பெயர்ச்சியையொட்டி, திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். நவக்கிரகங்களில் பலம் பொருத்திய கிரகங்களில் ஒன்று வியாழன். குருபகவானின் ஆதிக்கம் பெற்ற இக்கிரகம் மூலம், மங்களகரமான காரியங்கள் ஈடேறும். பிரார்த்தனை மூலம் வக்கிர குருவின் எதிர்விளைவுகளிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை இடம் பெயரும் குருபகவான், உத்திராடம் நட்சத்திரம் மகர ராசியிலிருந்து நேற்றிரவு, 9.18 மணிக்கு, புதனின் வீடான மிதுன ராசிக்கு பிரவேசமாகிறார். இதனால், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களையும், கடகம், மீனம் ராசிக்காரர்கள் சுமாரான பலன்களையும் பெறுவர். மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகர ராசிக்காரர்கள் குருப்பெயர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது. சிறப்பான பலன் பெறும் ராசிக்காரர்கள் உட்பட அனைவரும், குருவருளை பெற பரிகாரம் செய்து கொள்வது அவசியம். சிறப்பு ஏற்பாடு: குருபகவானுக்குரிய கடவுள் பிரம்மன் என்பதால், குருப்பெயர்ச்சி தினத்தன்று பிரம்மனை வழிபடுவது சிறப்புக்குரியது. பிரம்மன் அருள்பாலிக்கும், திருச்சி உத்தமர்கோவில், திருப்பட்டூர் ஸ்தலங்களில் வழிபடுவது நற்பலன்களை வழங்கும். நவக்கிரக ஸ்தலமான, ஜீயபுரம் அருகே பழூரில் வழிபாடு நடத்துவதும் சிறப்பானது என்பதால், இந்த ஸ்தலங்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதேபோல, அனைத்து சிவ ஸ்தலங்களிலும் குருபகவான் தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மஞ்சள் ஆடை, கொண்டை கடலை, முல்லைப்பூ ஆகியன குருபகவான் வழிபாட்டுக்கு உகந்தவை என்பதால், இந்த பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்தும், நெய் விளக்கேற்றியும் குருவருள் முன் நிற்க பக்தர்கள் வழிபட்டனர்.