வேதாரண்யம்: வேதாரண்யம்-வள்ளியம்மை சாலையிலுள்ள வீரமாகாளியம்மன் கோவில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, சம்வஸ்தராபிஷேகமும், கப்பரை திருவிழாவும் வெகுவிமரிசையாக நடந்தது. இவ்விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதேவ பட்டிணம் மதிவாணன் குழுவினரின் கோவலன்-கண்ணகி கதாகாலட்சேபமும் நடந்தது. முடிவில், கப்பரை திருவிழாவையொட்டி வேதாமிர்த ஏரியிலிருந்து பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, வழிபட்டனர். தொடர்ந்து, அம்மன் வீதியுலா காட்சியும், அம்மனுக்கு அக்னி கப்பரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி அடைக்கலசாமி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.