பதிவு செய்த நாள்
03
ஜூன்
2013
10:06
சேலம்: சேலத்தில், தொடர் மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. ஐந்து கிராம மக்கள் திரண்டு வந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால், ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. தண்ணீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது. மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே, கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சேலம் செட்டிச்சாவடியில், இரண்டு கழுதைகளை அழைத்து வந்து, ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்தனர். நேற்று மதியம், 1 மணியளவில், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்களும், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராம பகுதி மக்களும் திரண்டு வந்தனர். பூ, பழம், மேள தாளம் முழங்க, சித்தர்கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கழுதைகள், அங்குள்ள ஊரணி மாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு, பூசாரி குழந்தை, கழுதையின் கழுத்தில் மாலையை அணிவித்தார். பின், மற்றொரு கழுதை சார்பில், ஒரு கழுதைக்கு தாலியை கட்டினார். அங்கிருந்த மக்கள் அனைவரும் அர்ச்சனை தூவினர். செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கோவில் தர்மகர்த்தா, ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை கூறியதாவது:செட்டிச்சாவடி பகுதியில், நெல், சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நடப்பட்டுள்ளன. எப்போதும், நீர் நிரம்பி காணப்படும் இந்த பகுதி, மழை இல்லாததால் வறண்டு கிடக்கிறது. அதனால், கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தோம். ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று, சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தினோம்.நேற்று முன்தினம், எங்கள் பகுதியில் மழை பெய்தது, அதேபோல், தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என கடவுளை வேண்டினோம்.இவ்வாறு அவர் கூறினார்.