பதிவு செய்த நாள்
03
ஜூன்
2013
10:06
திருப்பதி: திருப்பதியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையால் மின் வெட்டு நிலவுகிறது. இதனால் கம்ப்யூட்டர் சர்வர்கள் பாதிப்பு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனம் டிக்கெட் பெற்று அறை ஒதுக்கீடு பெறுவதில் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கோடிகளில் புரளும் இடைத்தரகர்கள்: திருமலையில், திருமணம் செய்வது என்பது, மிகவும் லாபகரமான வியாபாரமாகி விட்டது. திருமணங்களுக்கான ஏற்பாடுகளை செய்யும் இடைத்தரகர்கள் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றனர் என்பதை, திருமலை -திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைகண்டறிந்துள்ளது. ஒவ்வொரு இடைத்தரகரும், ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதும் அம்பலமாகி உள்ளது. திருமலையில், திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேவஸ்தானம் செய்துள்ளது. இதற்காக புரோகிதர்கள் மற்றும் வாத்தியகாரர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தின் கட்டடம், திருமலை நுழைவு வாயில் பகுதியில் உள்ள "சுதர்சனம்பில்டிங் அருகே உள்ளது.பக்தர்கள் இங்கு திருமணம் செய்ய, ஒரு திருமணத்துக்கு, 800 ரூபாய் கட்டணம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், சம்பாவனை என்ற பெயரில், கூடுதல் தொகையை, அவர்களுக்கு பக்தர்கள்அளிக்கின்றனர்.
விருந்தினர் மாளிகை: இதுதவிர, திருமலையில் உள்ள மடங்கள், விருந்தினர் மாளிகை கட்டடங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன. இந்த திருமணங்களுக்கான ஏற்பாடுகளை செய்ய, தேவஸ்தானத்திடம் லைசென்ஸ் பெற்ற, 29 இடைத்தரகர்கள் உள்ளனர். தேவஸ்தான நலத்துறை மூலம், 15ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.பக்தர்களுக்கு உதவ வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். இதற்காக இடைத்தரகர்கள், தேவஸ்தானத்துக்கு, எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவர்களுடன் சேர்த்து, தற்போது திருமலையில், 70இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.இவர்கள் மடங்கள், கர்நாடக சத்திரம், விருந்தினர் மாளிகை, காலி இடங்கள் ஆகியவற்றில் திருமணம் செய்ய, 3 லட்சம் ரூபாயில் இருந்து, 15 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.ஒரே நாளில், ஒரே இடத்தில், அதிகாலை, காலை, மதியம், இரவு என, பல்வேறுநேரங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களையும் இவர்கள் நடத்தி வைக்கின்றனர். இப்படி, ஒரே நாளில் பல திருமணங்களை நடத்தி, 1 கோடி ரூபாய் கூட வசூலாவது உண்டு.
திருமண பேக்கேஜ்: மடங்களில் திருமணம்செய்யக் கூடாது என்பது தேவஸ்தான விதி. ஆனால் சில மடங்களில், இடைத்தரகர்களே, "திருமண பேக்கேஜ் அமைத்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்கு தற்போது, நான்குமடங்கள் பெயர் பெற்றவையாக உள்ளன. இந்த மடங்களில்,திருமணம் செய்து வைக்க, அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய் வசூல் செய்கின்றனர். தேவஸ்தான புரோகிதர்சங்கத்தில், ஒரு மாதத்தில், 600 திருமணங்கள்நடக்கிறது என்றால், இடைத்தரகர்கள் ஏற்பாட்டில், அதைவிட இரண்டு மடங்குதிருமணங்கள் நடக்கின்றன. இப்படி, இடைத்தரகர்கள் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்பதை, திருமலை - திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்டறிந்துள்ளது. மேலும், ஒரு இடைத்தரகரின் ஆண்டு வருவாய், 1.2 கோடி ரூபாயை தாண்டுகிறது என்பதையும், கண்காணிப்பு துறை கண்டுபிடித்துள்ளது. திருமலையில், திருமணம் என்பது வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், இதற்கு தேவையான விதிகளை தேவஸ்தானம் ஏற்படுத்தி, இடைத்தரகர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என, பாதுகாப்புமற்றும் கண்காணிப்பு துறை, ஆலோசனை கூறியுள்ளது.