நவக்கிரகங்களில் கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் விநாயகர். ஆனால், கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியிலுள்ள ஈச்சனாரி விநாயகர் 27 நட்சத்திரங்களுக்கும் அதிதேவதையாக விளங்குகிறார். அசுவினி முதல் ரேவதி வரையான 27 நாட்களிலும், அந்தந்த நட்சத்திரத்திற்குரிய விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று விநாயகரை அலங்காரத்தில் தரிசித்து சிதறு தேங்காய் உடைத்தால் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஜாதக ரீதியாக கேது திசை, கேது புத்தி நடப்பில் உள்ளவர்களும் இவரை வழிபட்டால் நன்மை பெருகும். இந்த நட்சத்திர அலங்காரம், இங்கு தவிர வேறெந்த விநாயகர் தலத்திலும் காணமுடியாத ஒன்றாகும்.