திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2025 10:10
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த அக்.22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது சூரர்களை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்தநிலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டு முருகப்பெருமான்-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டனர். பின்னர் திருமண கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்கள் தட்டுகளில் வேட்டி, பட்டு புடவை, பழங்கள், பூக்கள் என சுவாமிக்கு திருமண சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து, அதனை காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.