பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
12:06
திருக்கழுக்குன்றம்: ஆனூர் கோதண்டராம பெருமாள் கோவில், பராமரிப்பின்றி சீரழிந்துள்ளதால், சீரமைத்து, பூஜைகள் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பாலாற்றங்கரையில், பழமை வாய்ந்த கோதண்டராம பெருமாள் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில், கோதண்டராமர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கோவிலில், நான்கு திசையிலும், நுழைவாயில்கள் அமைந்துள்ளன. கருவறையின் வெளியே, அர்த்த மண்டபமும், கலை நயம் மிக்க சிற்பங்களுடன், 18 தூண்களும் உள்ளன. சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, பாலாற்றங்கரையில், படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள வேதநாராயண பெருமாள் திருக்கோவிலுடன் இணைக்கப்பட்ட இக்கோவிலில், பல ஆண்டுகளுக்கு முன், ஐம்பொன்சிலைகளை கொண்டு, திருவிழாக்கள் நடைபெற்றன. பல்வேறு, சிறப்புகள் வாய்ந்த இக்கோவில், போதிய பராமரிப்பின்றி, சீரழிந்து வருகிறது. மண்டபத்தில் மேற்பகுதியில், முட்செடிகள் வளர்ந்துள்ளன. பாழடைந்து காணப்படும் இக்கோவிலை, சீரமைத்து, பூஜைகள் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இக்கோவிலை சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.