பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
12:06
திருக்கழுக்குன்றம்: ஆனூரில், பழங்கால மனிதர்களின் ஆதாரமாக உள்ள முதுமக்கள் தாழியை, தொல்லியல் துறையினர் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூரில், பாலாற்றங்கரையை ஒட்டி, பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாள சின்னமாக, அவர்களின் புதைவிடங்கள் உள்ளதை, பல ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பகுதியில், முதுமக்கள் தாழி உள்ளதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. வரலாற்றுச் சின்னங்கள் இறந்தவர்களை புதைத்த இடங்களில், நிலப்பரப்பின் மீது, வட்ட வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் மற்றும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்ற பழமையான சின்னங்களை கொண்ட இடம், தற்போது, வருவாய்த் துறை ஆவணங்களில், ஏரியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், அங்குள்ள பழங்கால மக்களின் நினைவிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. தொல்லியல் துறையினரால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்களால் திருடப்பட்டது. ஏரியில், மணல் கொள்ளை அதிகரித்து வருவதால், பழங்கால சின்னங்கள் சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதைப் பாதுகாக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "பழங்கால மக்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, சடங்குகள், விழாக்கள், உறவு முறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இதுபோன்ற அடையாளச் சின்னங்கள் உதவுகின்றன. ஆனூரில் உள்ள முதுமக்கள் தாழி, பழமையான சின்னமாகும். எனவே, இதை, அழிவில் இருந்து காக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.