பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
12:06
புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் திருப்பணிகளை, தொழில் நுட்பக் கமிட்டியினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.வில்லியனூரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் கோவில், 11ம் நூற்றாண்டில், தர்மபாலன் சோழனால், 4.33 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது.நூற்றாண்டு கண்ட திருக்காமீஸ்வரர் கோவிலை புனரமைக்க, இந்து அறநிலையத் துறை சார்பில் 11 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, முன்மண்டபம், சூரப்பிள்ளையார், சண்முகனார் சன்னதி உள்பட 10 புனரமைப்பு பணி நடந்து வருகிறது .கோவில் திருப்பணிகளை இந்து அறநிலைத் துறை ஆணையர் மோகன்தாஸ், தொழில்நுட்பக் கமிட்டி தலைவரும் கண்காணிப்பு பொறியாளருமான மாந்தையன், செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் செல்வராஜ், மகாபலிபுரம் சிற்ப கலைக் கல்லூரி பேராசிரியர் பத்பநாபன் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டியினர் நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அவர்களை வரவேற்ற கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன், திருப்பணிகளை விவரித்தார். ஆலோசனையின்போது முன்மண்டபம் அருகே புனரமைப்புக்காக இடிக்கப்பட்ட 11 அடி உயர சூரப்பிள்ளையார் சன்னதி, சண்முகனார் சன்னதி பின்புறம் பழமையான கட்வெட்டுகள் இருப்பதால் அவற்றில் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்தி, பக்தர்களுக்கு பார்வையில் வைக்கவும், சன்னதிகளை 2.15 அடி முன்னதாக அமைக்கவும் முடிவெடுக்கப்பட்து.திருப்பணிகள் குறித்து தொழில்நுட்பக் கமிட்டி அதிகாரிகள் கூறும்போது, " கோவில் வெளிபிரகாரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டுபோய் காணப்பட்டது. இதன் எதிரொலியாக எட்டு இடங்களில், எடுத்துக் கட்டி மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவரை ஒட்டியுள்ள சண்முகனார் சன்னதியில் மேற்கூரை மரப்பலகையால் அமைக்கப் பட்டுள்ளதால் வலுவிழந்துள்ளது. இதை கற்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.