பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
12:06
மேட்டூர்: சேலம் மாவட்ட எல்லையில் உள்ள, குருவரெட்டியூர் கிராமத்தில், அம்மனுக்கு பணமாலை சூட்டியும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். சேலம் மாவட்ட எல்லையில், கண்ணாமூச்சி அருகே, ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் கிராமத்தில், அக்னி மாரியம்மன் கோயில் உள்ளது. கோவிலில் இரு ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை நேற்று முன்தினம் துவங்கியது. பண்டிகையின், இரண்டாம் நாளான நேற்று மாரியம்மனை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மனை வரவேற்கும் விதமாக சுற்றுப்பகுதியில் உள்ள ஆணைகவுண்டனூர், விளாமரத்துக்காடு, பி.ஜி.நகர், கருங்கரடு, ஓலையூர், கண்ணாமூச்சி, பாலமலை கிராமத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். மேலும், பக்தர்கள், 1,000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் என பல லட்சம் ரூபாயை மாலையாக கட்டி அம்மனுக்கு சூட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று ஒரே நாளில் கோயில் அருகிலுள்ள குருவரெட்டியூர்-அம்மாப்பேட்டை ரோட்டில் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.