பதிவு செய்த நாள்
14
ஜூன்
2013
11:06
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பாலாலய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம் மாநகர் கடைவீதியில், பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, இக்கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும், பக்தர்கள் வந்து ஸ்வாமியை தரிசிக்கின்றனர். ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், ஜூலை, 15ம் தேதி, கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதையொட்டி, மூலவர் ராஜகணபதிக்கு பாலாலயம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், "சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முதற்கட்டமாக மூலவருக்கு பாலாலய பூஜை நடத்தப்பட்டது. மேலும், வரும், 7ம் தேதி முதல், 15ம் தேதி வரை, கும்பாபிஷேக யாக பூஜைகள் நடக்க உள்ளது என்றனர். நிகழ்ச்சியில், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, கோவில் உதவி ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.