கொஞ்சும் நிலவும் குளிர்ந்த வானும் கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2013 05:06
*மனிதனுக்கு எல்லாம் கிடைத்தாலும் ஒன்று மட்டும் கிடைப்பதில்லை. அது தான் மனநிம்மதி. இது கிடைத்து விட்டால் எல்லாம் கிடைத்த சந்தோஷம் நம்மிடம் வந்து விடும். கடவுளை வணங்குவதால் மனமும், உடலும் தூய்மை பெறுகிறது. வலிமையும், புத்துணர்ச்சியும், நிம்மதியும் நம்முள் உண்டாகிறது. *மண்வெட்டியால் தோண்டுபவனிடமும், கல் உடைக்கும் தொழிலாளியிடமும் கடவுள் இருக்கிறார். காயும் வெயிலிலும், நனையும் மழையிலும் கடவுள் இவர்களோடு ஐக்கியமாகிறார். *கடவுள் இன்னும் மனிதர்களிடம் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் இதைத் தான் உணர்த்துகிறது. *இன்ப துன்பம் உலகில் தவிர்க்க முடியாது. இரண்டையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை கடவுளிடம் யாசிப்போம். நம் மனதை கொஞ்சும் நிலவாகவும், குளிர்ந்த வானமாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது. *பொருள் கிடைத்தும் சிலருக்கு ஆசை அடங்குவதில்லை. அப்போது ஆசை, செயல் இரண்டுமே நிறைவேறாமல் போய்விடும். *உண்மையான மகிழ்ச்சி நாம் சம்பாதிக்கும் பணத்தில் இல்லை. அதில் எவ்வளவு தர்மங்களைச் செய்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது. *செயலற்றநிலை (சோம்பேறித்தனம்) என்பது நரகத்தில் மனிதனைத் தள்ளிவிடும். கடுமையான உழைப்பே மேலானதாகும். *நாம் அனைவரும் ஒன்றைச் செய்யத் தவறுவதில்லை. நம்மை விட்டு விட்டு வேறு யாரையாவது சீர்திருத்த விரும்புகிறோம். *உலகத்தை தவறாகப் புரிந்து கொண்டு விட்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்லித் திரிகிறோம். *சொல்லுகின்ற விஷயத்தை நீண்ட கதையாகச் சொல்லத் தேவையில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே அறிவுடையவர்களின் செயல். *தகுதியுடன் வாழ வேலை செய்ய வேண்டும். வேலை செய்ய வேண்டுமானால் வாழ வேண்டும். இப்படியாக வாழ்வும், தொழிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. *சுயபுத்தியில்லாத மனிதன் வாழ்வில் என்றும் ஒளியைக் காணமுடிவதில்லை. தன்னம்பிக்கை இருந்தால் சுயபுத்தி தானாக வந்துவிடும். *நியாயமான எண்ணம் கைகூடவில்லையே என வருந்த வேண்டாம். அரும்பு ஒருநாள் மலராவது போல, நல்ல எண்ணம் ஒருநாள் செயலாக மலர்ந்து பலனளிக்கும். *இருளில் இருந்து வெளியே புறப்பட்டு வாருங்கள். உளப்பூர்வமாக அனைவர் மீதும் அன்பு காட்டுங்கள். அழுக்கடைந்த ஆடை உடுத்தும் தொழிலாளியிடமும் கடவுளைத் தரிசியுங்கள். *உலகம் அனைத்தையும் ஆள்பவர் கடவுள் என்ற உண்மையை உணராதபோது, அகம்பாவம் ஒருவரின் மனதில் தலைதூக்குகிறது. *மனிதன் தனக்குரிய கடமையை மறந்து கடவுளை அடைவதாகச் சொல்லி தனித்து ஒதுங்கி வாழ்வது தன்னையே ஏமாற்றிக் கொள்வதாகும். *கோயிலுக்குச் சென்று தூபதீபம் காட்டுவதை விட, உழைப்பது உயர்ந்தது. உழைப்பாளியின் வியர்வையில் கடவுள் மூழ்கியிருக்கிறார். -ரவீந்திரநாத் தாகூர்