பதிவு செய்த நாள்
20
ஜூன்
2013
10:06
திருவள்ளூர்: வேம்புலி அம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர், வீர ராகவர் கோவில் அருகே, கிராம தேவதையான வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வேம்புலி அம்மன் மற்றும் அதன் பரிவார சுவாமிகளுக்கும் நூதன ராஜகோபுரம், மூலவர் விமானம் ஆகியவற்றுக்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த, 17ம் தேதி தன பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மறுநாள், விசேஷ சந்தியாக பூஜை, அஷ்பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. நேற்று காலை, 8:30 மணிக்கு யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை, 9:30 மகா பூர்ணாஹூதி, 10:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடுதல் நடைபெற்றது. காலை, 11:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. பின்னர், அங்கிருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், 12:30 மணிக்கு மகா அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை, 7:00 மணிக்கு கேரள வாத்தியங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகாளை, வேம்புலி அம்மன் சேவா குழு மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்தனர்.