*கடவுளை நேசிப்பது என்றால் வேறு ஏதும் அல்ல! உலகிலுள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதே கடவுளை நேசிப்பதாகும். *நட்ட விதை மண்ணில் முளைத்து வேர்விடுவது போல, மனிதனுக்கு நல்லது நடக்கவும் ஒரு நேரம் வரத்தான் செய்யும். எல்லாருக்கும் இது பொருந்தும். *விண்ணில் இருக்கும் கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால், தன்னம்பிக்கை என்பது எல்லாருக்கும் அவசியமானது. *தன்னம்பிக்கை இருந்துவிட்டால் எல்லாம் உங்களிடம் இருக்கிறது. அது இல்லாவிட்டால் என்ன இருந்தாலும் ஒருபயனும் உண்டாகாது. எறும்பைப் பாருங்கள். அது கூட நம்பிக்கையோடு தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. *இரண்யகசிபுவிடம் சீறிப்பாயும் நரசிம்மனே, பிரகலாதனிடம் சாந்தகுணம் கொண்டு அருளைப் பொழிகிறார். ஒரே கடவுளே அன்பு, கோரவடிவம் என இருவேறு நிலைகளில், அவரவர் குணத்திற்கேற்ப செயல்படுகிறார். *கடவுளின் கோபத்தைக் கூட சமயத்தில் மாற்றி விடலாம். ஆனால், பெரியவர்களை நிந்திப்பதால் உண்டாகும் பாவத்தைப் போக்க கடவுள் கூட துணை நிற்பதில்லை. *கடவுள் இல்லவே இல்லை என்று சொல்வதும், எனக்கு நாக்கு இல்லை என்று சொல்வதும் ஒன்று தான். *தான் என்ற அகங்கார எண்ணமும், சுயநலமும் கொண்ட மனிதர்களைக் கண்டதும், கடவுள் ஆயிரம் அடி விலகி ஓடி விடுவார். *பள்ளத்தில் விழுவதற்கு ஒரு நிமிட நேரம் போதும். ஆனால், மேலேறி வருவதற்கு பொறுமையும், சிரமமும் தேவைப்படும். அதுபோல ஆக்குவதற்கு முயற்சி அதிகம் தேவைப்படுகிறது. *எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று வேதாந்தம் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பவர்கள் சோம்பேறிகள். ஒரு செயலை சிறப்பாகவும், விவேகமாகவும் செய்யவேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். *இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். ஆனால், நம்பிக்கைக்குரிய மாறாத ஒரே உற்ற நண்பனாக கடவுள் மட்டுமே விளங்குவார். *பிறரை வணங்குவது என்பது பலவீனம் ஆகாது. புல்லையும் ஒரு பொருட்டாக மதித்து வணங்கும் பெருந்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். *தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் தரும் மரத்தைப் போல, தன்னைத் துன்புறுத்தும் கொடியவனுக்காகவும் பிரார்த்தனை செய்பவனே ஆன்மிகவாதி. *துயரத்தால் மனம் வருந்தும்போது, பிறரிடம் உங்கள் @வதனையை சொல்லாதீர்கள்.இஷ்டதெய்வத்திடம் முறையிடுங்கள். -அமிர்தானந்தமயி