பதிவு செய்த நாள்
20
ஜூன்
2013
04:06
தினமும் தூங்கச் செல்லும் முன் தூக்கத்துக்கு அதிபதியான நித்ராதேவியிடம், துயிலே! அமைதியான துயிலே! நித்ரா சக்தியே! நீயே இயற்கையின் மென்மையான தாதி. புத்துணர்ச்சியளிக்கும் இனிய மருந்து. துன்பம், வலி, அல்லல் அனைத்திலும் என்னை அமைதிப்படுத்தும் அருமருந்து, பிரமனிடத்திலே என்னை இட்டுச்செல். பேரின்பத்திலே என்னை முழுக்காட்டு. எனது நாடி, நரம்பு, மூளையை வலுப்படுத்தி புதிய வலிமை தா. துயில் வடிவ நித்ராதேவியே! உனக்கு எனது வணக்கம், என்று சொல்லிவிட்டு படுங்கள். சுகமாக உறங்குவீர்கள்.
தூக்கம் இயற்கையின் அருமருந்து. நல்ல தூக்கத்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. களைப்பை நீக்கி, இழந்த சக்தியை ஈடுசெய்ய மனதுக்கும், உடலுக்கும் உள்ள சக்தியைப் பொறுத்ததே தூக்கத்தின் காலஅளவு. போதிய தூக்கமில்லாவிட்டால், திறமையில்லாமல் போகும்.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை வயது, மனோநிலை, செய்யும் வேலையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு மூதுரையின் படி ஆணுக்கு ஆறுமணி நேரமும், பெண்ணுக்கு ஏழுமணி நேரமும் தூக்கம் தேவை. குழந்தைகளுக்கு பத்துமணி நேர தூக்கம் வேண்டும். முட்டாளுக்கு எட்டுமணி நேர தூக்கம் தேவை. அவனது மூளை வளர்ச்சிக்கு இது அவசியம். விவசாயம், வண்டி இழுத்தல், சுமை தூக்குதல் உள்ளிட்ட கடும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை.
பொதுவாக, இரவு பத்து மணிக்கு படித்து நான்கு மணிக்கு எழ வேண்டும். சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழும் ஒருவனுக்கு உடல்நலம், செல்வம்,
ஞானம் ஆகியவற்றைத் தரும். அதிகத்தூக்கம் ஒருவனை மந்தமாகவும், சோம்பேறியாகவும் ஆக்கிவிடும். பெரும்தூக்கம் விரைவில் உடலை
சீரழித்து, புத்திக் கூர்மையையும் குறைத்து விடும்.
தூக்கத்திற்காக போதை மருந்துகளைச் சாப்பிடாதே. ஜன்னல் கதவுகளைத் திறந்து வை. பிராணவாயுவை அதிகமாக உட்கொள்வதால் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இயல்பாகத் தூங்க முடியாவிட்டால், பதினைந்து நிமிடங்கள் தெளிந்த மனதோடு சுறுசுறுப்பாக நட. பிறகு படுத்தால் உடனே நல்ல தூக்கம் வரும். பக்கவாட்டில் படுப்பது நல்லது. அதிலும் இடது பக்கமாகப் படுத்தால் சூர்யநாடி அல்லது பிங்களநாடி செயல்படும். சாப்பிட்டது எளிதில் ஜீரணமாகும். தூக்கம் நன்றாக வரும்.