ஆறுபடை வீடுகளில் மட்டும் என்றில்லாமல், தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் தலமாக விளங்குகிறது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இதற்கு காரணம் உண்டு. தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன், பேத்திகளுடன் கொஞ்சி மகிழ அவர்கள் குடியிருக்கும் இடத்தை நாடி அடிக்கடி செல்வதுண்டு. ஹாஸ்டலில் தங்கியிருக்கும் குழந்தைகளைப் பார்க்க பெற்றோர் மாதம் தவறாமல் செல்வர். குழந்தைகள் என்றால் அவ்வளவு அலாதிப்ரியம். பழநி முருகனும் குழந்தை வடிவினன். திருவாவினன்குடியில் அவரது பெயரே குழந்தை வேலப்பர் என்பது தான். பழநிமலை உச்சியில், அவர் குழந்தையாகவே வந்து நின்றார் என்கிறது தலபுராணம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். அவ்வாறு, முருகப்பெருமானின் புகழைக் கொண்டாடுவதற்கு தான் அதிக பக்தர்கள் வருகின்றனர். இந்த தலத்துக்கு ஏராளமான அருளாளர்கள் வந்து சென்றுள்ளனர். இறைவனை விட அவனது அடியார்களுக்கு சக்தி அதிகம். அதனால், இவ்வூர் மிகவும் புனிதமானதாகவும், தெய்வ சாந்நித்யம் கூடியதாகவும் திகழ்கிறது.