பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
04:06
ஓடிவந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களின் மனம் புண்படும்படி செய்வது தனது விரதத்திற்கு விரோதமாக முடியும் என ராமபிரான் கருதினார். தேரை நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர்களை கவனிக்காததுபோல் இறங்கி நடந்தார். ஓரிடத்தில் அவர்கள் அமர்ந்தனர். ராமனுக்கு ஆங்காங்கே கிடந்த புற்களால் படுக்கையை சுமந்திரரும், லட்சுமணனும் அமைத்தனர். சீதா ராமர் அதிலேயே நித்திரை செய்தனர். ஓடிவந்த மக்கள் அவ்விடத்தை அடைந்தனர். ராமன் உறங்கிக் கொண்டிருப்பதால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கேயே படுத்தனர். அதிகாலையில் எழுந்த ராமன் சுமந்திரரையும் லட்சுமணனையும் அழைத்து, இவர்கள் எழுவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் கோரிக்கையை ஏற்று நான் அயோத்தி திரும்ப வேண்டி வரும். அதனால் என் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிக்கு பங்கம் உண்டாகும். உடன் புறப்படுங்கள், என்றார்.
அவர்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு போய்விட்டனர். காலையில் எழுந்த மக்கள் ராம லட்சுமணரைக் காணாமல் அழுது தீர்த்தனர். அயோத்திக்கு வெறும் கையுடன் திரும்பினர். திரும்பியவர்களின் பத்தினியர் அவர்களை திட்டித்தீர்த்தனர். ராமன் இல்லாமல் இங்கு ஏன் திரும்பினீர்கள்? பரமாத்மா முக்கிய அவதாரம் எடுத்து நம் தேசத்தில் தங்கினார். அவரை அனுப்பிவிட்டு நமக்கென்ன வேலை? என்று புலம்பினர்.
இங்கே இப்படியிருக்க, ராமன் கோசல நாட்டு எல்லையைக் கடந்தார். எல்லையில் அயோத்திதேவி என்னும் காவல் கடவுளை வணங்கினார். அங்கிருந்து கங்கையை நோக்கி அவர்கள் சென்றனர்.இவ்விடத்தில் கங்காதேவியின் பெருமைகளை தெரிந்து கொண்டாக வேண்டும். கங்கையின் பெருமையை பேசுவதே நம் பாவத்தை போக்கிவிடும். இந்த தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் கங்கையின் பெருமையை தெரிந்துகொள்வதன் மூலம் தங்கள் முன்னோர்கள் செய்த பாவங்களையும் சேர்த்து தீர்க்கிறார்கள் என கருதலாம். கோசல ராஜ்ஜியத்திற்கு தெற்கே கங்கைநதி ஓடுகிறது. சொர்க்கம், பூமி, பாதாள உலகம் ஆகிய மூன்றிலும் பாய்கின்ற நதி அது. அதாவது ருத்ரனின் தலையில் தோன்றி, பூமிக்கு வந்து, சமுத்திரராஜனோடு கலக்கிறது. இவள் சமுத்திரராஜனின் மனைவி.
மகரிஷிகள் இந்த நதியைத்தேடி வந்துகொண்டே இருப்பார்கள். தேவ மாதர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கின்னரர்களும், கந்தர்வ பத்தினிகளும் ஜலக்கிரீடை செய்வதற்காக இங்கே வருவார்கள். பல தேவதைகளின் விளையாட்டு மைதானமாக கங்கைநதி விளங்குகிறது. அது கற்பாறைகளின் மீது மோதும்போது மிருதங்க ஒலி கேட்கும். சில இடங்களில் இடி ஒலி எழுப்பும். அன்னப்பறவைகளும், நீர்காக்கைகளும் விளையாடி மகிழும். தாமரை, ஆம்பல், செங்கழுநீர், நீலோத்பவம் ஆகிய மலர்கள் தண்ணீரில் மிதந்து செல்லும். ஏராளமான முதலைகளும், பாம்புகளும் கங்கையில் வசித்தன. இந்த கங்கையை ரசித்தபடியே சீதா ராமர் நீண்டநேரமாய் நின்றனர். அந்த புண்ணியநதியை தரிசனம் செய்தனர். சுமந்திரர் ரதத்திலிருந்து குதிரைகளை அவிழ்த்து ஓரமாக கட்டிவிட்டு, அடுத்த உத்தரவுக்காக ராமனின் அருகில் கைகட்டி நின்றார். அப்போது கங்கைக்கரையில் வசித்தவனும், அந்தப்பகுதியின் அரசனுமான குகன் என்பவன் வந்தான். அவன் ராமபக்தன். வேடர் குலத்தில் பிறந்தவன். ராமபிரானே தன் நாட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஓடிவந்து பார்த்தவன் அப்படியே அதிர்ந்துவிட்டான். வழக்கத்திற்கு மாறாக ராமபிரான் அணிந்திருந்த மரவுரி உடைகளைக் கண்டு கண்ணீர் வடித்தான். அப்படியே அவரை கட்டி அணைத்துக் கொண்டான். என் தெய்வமே! தாங்கள் இந்த நாட்டிற்கு வந்ததில் மிகுந்த பெருமை கொள்கிறேன். நீங்கள் வந்தபிறகு இது என் நாடு அல்ல. உங்கள் நாடு. நீங்களும் சீதா தேவியும் இங்கிருந்தே ஆட்சி செலுத்துங்கள், என உணர்ச்சிவசப்பட்டு கூறி, வேடர்களுக்கே உரித்தான வகையில் மாமிச வகைகளை கொண்டுவந்து, ராமபிரானே! தாங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றான்.
ராமபிரான் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், அன்பனே! நீ சொன்ன வார்த்தைகளே எனக்குப் போதுமானது. இது அத்தனையையும் நான் ஏற்றுக்கொண்டேன். நீ வைத்ததை நான் மாமிசமாக கருதவில்லை. என்மீது கொண்ட அன்பின் காரணமாய் இவற்றையெல்லாம் படைத்தாய். அந்த அன்பை நான் உணர்கிறேன். நீ என்னுடையவன் ஆனாய். இவ்வுலகில் ஒரு சிலர் எவ்வளவுதான் உபசரித்தாலும் அதில் குறை கண்டுகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுக்காரர்கள்தான் இப்போது பெருகிவிட்டார்கள். நீ இப்படியெல்லாம் செய்தால்தான் உன் உபசாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உன் உண்மையான வார்த்தைகளே என்னை கிறங்கடித்துவிட்டன. நான் பழங்களையும் கிழங்குகளையும், மரத்தின் வேர்களையும் மட்டுமே பதினான்கு ஆண்டுகள் சாப்பிட்டு வாழ்வதென விரதம் எடுத்துள்ளேன். அது என் தந்தையின் கட்டளையாகும். எனவே நீ படைத்த இந்த உணவு வகைகளை என்னால் சாப்பிட இயலாது. அது தர்மத்திற்கு விரேதமானதாகும். என்னை சுமந்து வந்திருக்கும் குதிரைகளுக்கு நீ விரும்பும் உணவையெல்லாம் கொடு. அவற்றிற்கு கொடுத்தாலே நாங்கள் அனைவருமே சாப்பிட்டது போல் ஆகும், என்றார். குகன் குதிரைகளுக்கு வேண்டுமளவு உணவு கொடுத்தான்.
சற்று நேரத்திற்குள் லட்சுமணன் கங்கைநீரை ராமனுக்கு கொண்டுவந்து கொடுத்தார். அதை சீதையும் ராமனும் பருகினர். கண்ணயர்ந்துவிட்டனர். அப்போது குகன் ராமனின் பெருமையை லட்சுமணனிடமும் சுமந்திரரிடமும் கூறி மகிழ்ந்தான். விடிய, விடிய அவர்கள் மூவரும் உறங்கவில்லை. மறுநாள் கங்கையைக் கடந்து தண்டகாருண்யத்திற்குள் செல்ல ஏற்பாடு செய்துதர குகனிடம் வேண்டினார் ராமன். குகன் அவ்வாறே செய்தான். குகனை தன் அருகில் அழைத்த ராமன், எனக்கு இதுவரை மூன்று தம்பிகள்தான் இருந்தனர். இன்று முதல் உன்னையும் சேர்த்து நான்கு தம்பிகள் இருக்கிறார்கள். உன் உண்மையான பக்தியும், உபசரிப்பும் அத்தகையது, எனக்கூறி அவனை மார்போடு அணைத்துக்கொண்டார். குகன் அவரை கண்ணீருடன் வழியனுப்பினான். குகனின் வேலைக்காரர்கள் படகை கங்கையை விட்டுக் கிளப்பினர். அப்போது சுமந்திரர் ராமனுடன் வந்தே தீருவேன் என அடம்பிடித்தார். அவரை சமாதானம் செய்த ராமன், சுமந்திரரே! தாங்கள் அவசியம் அயோத்திக்கு செல்ல வேண்டும். கைகேயி உங்களைப் பார்த்தால்தான் நான் காட்டிற்குள் நுழைந்துவிட்டதை நம்புவாள். என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன் என்ற திருப்தி ஏற்படும். இப்படிப்பட்ட அரிய காரியங்களை செய்வதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும், என்றார். சுமந்திரர் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டு அயோத்தி திரும்பினார். படகு கங்கைக்கரையை அடைந்தது. கரையிலிருந்த ஒரு மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அப்போது ராமபிரான் லட்சுமணனிடம் அதிர்ச்சி தரும் சில தகவல்களை தெரிவித்தார்.