பதிவு செய்த நாள்
22
ஜூன்
2013
10:06
கல்பாக்கம்:கல்பாக்கம் நகரியம், காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, சிறப்பாக நடந்தது.அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியத்தில், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, காமாட்சி, விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப் பெருமான், நடராஜர், பக்த ஆஞ்சநேயர் நவகிரகங்களுக்கு சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில், நகரிய மக்கள் சார்பில், திருப்பணி நடந்தது. அதை தொடர்ந்து, ஜூன், 21 காலை, மகா கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. முன்னதாக, கடந்த 18ம் தேதி, கணபதி ஹோமம், 19ம் தேதி முதல், யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. ஜூன், 21 காலை, 10:00 மணிக்கு, வேதமந்திரங்கள் ஓதி, மங்கல வாத்திய முழக்கத்துடன், புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வஜ்ஜிரவேலு, ஜெயச்சந்திரன் மற்றும் திருப்பணி குழுவினர் விழாவில் பங்கேற்றனர்.