பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
மன்னார்குடி: மன்னார்குடியில், ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில், தெப்ப உற்ஸவ விழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலுள்ள ராஜகோபால ஸ்வாமி கோவில், வைணவ ஸ்தலங்களில் புகழ் பெற்றது. மேலும், தென்திருப்பதி, தெட்சண துவாரகை என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஆனித்தெப்ப உற்ஸவ விழா, நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது. மன்னார்குடியில், ஒவ்வொரு மாதமும் திருவிழா காணும் பெருமை பெற்ற ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஆனித்தெப்ப உற்ஸவ விழாவையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், பூஜைகள் செய்தபின் ருக்மணி, சத்யபாமா சமேதமாக ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமி, பல்லக்கில் தோன்றி நான்கு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து, இரவு 8,30 மணியளவில் ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ வித்ய ராஜகோபாலன் ருக்குமணி, சத்யபாமாவுடன் தோன்றி பக்தர்களுக்கு ஸேவைசாதித்தனர். பின்னர், வாணவேடிக்கை முழங்க தெப்ப உற்ஸவ விழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில், தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்த ஸ்ரீவித்ய ராஜகோபால ஸ்வாமி, மறுநாள் காலை 6 மணியளவில் கோவிலை அடைந்தார். இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.