அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2026 11:02
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையுடன் விழா துவங்குகிறது. முதற்கால பூஜை இரவு 8:00 மணி, இரண்டாம் காலம் 10:30 மணி, 3ம் காலம் நள்ளிரவு ஒரு மணி, 4ம் காலம் 3:30 மணி மற்றும் அதிகாலை 5:30 மணிக்கு உஷத் கால பூஜை ஆகியன நடைபெறுகிறது.
செயல் அலுவலர் சபரிஷ் குமார் கூறியதாவது:
அனைத்து பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அன்னதான கூட மைதான வளாகத்தில் பானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நான்கு காலமும் அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடக்கும். பக்தர்கள் பங்கேற்க வசதியாக இரும்பு தடுப்புக் கொண்டு வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் யாகசாலை அமைக்கப்படும் வளாகம் வழியாக கோவிலுக்குள் நுழைந்து வரிசையில் நின்று அவிநாசியப்பரை தரிசிக்கலாம். தொடர்ந்து அம்மன் ராஜகோபுரம் வழியே வெளியேறலாம். ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் கலையரங்கில் விடிய விடிய சலங்கை நாட்டியாலயா ஏற்பாட்டில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வாகன பார்க்கிங் தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே போலீசார் அறிவுறுத்தும் இடத்தில் பார்க்கிங் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அன்னதானம் மஹா சிவராத்திரி முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிஷேக அன்னதான கமிட்டி சார்பில் கோவில் நுழைவாயில் முன் உள்ள தேவர் திருமண மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு இன்று மாலை, 3:00 மணி முதல் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது.