மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் தேர் வரும் 22ம் தேதி வெள்ளோட்டம் நடக்க உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர்.
இதில் சோமநாதர் தேர் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிதாக தேர் செய்யும் பணி முடிந்துள்ளது.
தேருக்கான பிரதிஷ்டை, வெள்ளோட்ட விழா, தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.
புதிய தேரின் மேற்பரப்பில் பிரம்பாலான கொடுங்கைகள் பொருத்தும் பணி நிறைவு பெற்று அதற்கு மேல் கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி முடிவடைந்த உடன் தேர் அலங்காரப் பணிகள் துவங்க உள்ளன. வருகிற 20-ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி 22 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு ராதா பிரதிஷ்டையும் 11:00 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்ட விழாவும் நடைபெற உள்ளது.