பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
ரெட்டியார்சத்திரம்: இயற்கை அழகு மரங்கள் சூழ்ந்த கோபிநாதசுவாமி மலைக்கோயிலை, சுற்றுலா தலமாக மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயிலில், புரட்டாசி சனிக்கிழமை, ஆவணி மாத உறியடித்திருவிழா போன்றவை விசேஷமாக நடக்கிறது. மலைமீது கோயில் அமைந்துள்ளதால், பசுமையான மரங்கள், சுற்றிலும் பசுமையான புல்வெளி காட்சிகளையும் காணமுடியும். எனவே சுவாமி தரிசனத்துடன், இயற்கை அழகை பார்ப்பதற்காகவும் இங்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, கால்நடைகள் வளம் பெறுதற்கான வேண்டுதல் அதிகமாக இருந்ததால், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மட்டுமே நேர்த்திக்கடனுக்காக வந்து சென்றனர். தற்போது விசேஷ நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரும், குடும்பத்துடன் வருவதால், சுற்றுலா தலத்தைப் போன்று மாறி வருகிறது. இருப்பினும் செங்குத்தாக அமைந்த மலைப்படிகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை, போதிய போக்குவரத்து வசதி இல்லாத சூழல் போன்றவற்றால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ரெட்டியார்சத்திரத்தில் இருந்து மலைக்கோயில் அடிவாரம் வரை பஸ் வசதியும், அங்கிருந்து மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல ரோடு வசதியும் ஏற்படுத்த வேண்டும். அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்; ""உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மலையடிவார பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பூங்கா, நீருற்று போன்றவற்றை உருவாக்கி, சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.