பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
வடகுப்பம்: திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில், பீமன் படுகளத்தில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் ஊராட்சியில் அடங்கியது முனுசாமி நாயுடு கண்டிகை, சாமி நாயுடு கண்டிகை, வடகுப்பம், கொல்லப்பள்ளி கிராமங்கள். இந்த நான்கு கிராமங்களுக்கு, பொதுவான திரவுபதி அம்மன் கோவில் கொல்லப்பள்ளி அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா, ஆறு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, திருவிழா நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்த பிறகு, திருவிழா நடந்தது. இம்மாதம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, 16ம் தேதி பகாசூரன் வதம், 17ம் தேதி ராட்சத யாகம், திரவுபதி சுயம்வரம் மற்றும் அம்மன் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் காலை, 11:00 மணி அளவில், பீமன் படுகளத்தில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர். இதற்காக, கோவில் வளாகத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட, பிரமாண்ட சிலை வடிவங்கள் செய்து, அதைச் சுற்றி பொதுமக்கள் பார்த்து ரசிக்கும்படி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் மாலை, 7:00 மணியளவில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். அடுத்ததாக, இரவு, 10:00 மணியளவில், அர்ஜூனன் திரவுபதி அம்மன் உற்சவர் மலர் அலங்காரத்தில், மங்கள வாத்தியங்கள் இசைக்க வாண வேடிக்கையுடன், திருவீதிஉலா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் பகல், 2:00 மணியளவில் மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடந்தது.