பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
திருப்பூர், பி.என்.,ரோடு சத்ய சாயிபாபா கோவிலில், ஸ்ரீசத்யசாயி சப்தாஹ தேவாமிர்த சொற்பொழிவு நடந்து வருகிறது. சென்னையை சேர்ந்த சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது:பரிசித்த மகாராஜாவை, பாம்பு கடிக்கிறது; அவர் இறக்கிறார். மகன், சிறப்பு வேள்வி நடத்தி, அனைத்து பாம்புகளையும் வரவழைத்து அழிக்கிறார். அவரை கொன்ற தட்சன் என்ற பாம்பு மட்டும் வரவில்லை; பாம்பு இந்திரனிடம் சரணடைந்தது. இந்திரனுடன் வரும்படி, வேள்வி நடத்துகிறான். இந்திரனின் இருக்கையுடன், அதை பிடித்திருந்த பாம்பு வருகிறது. இந்திரன் தப்பித்து ஓடுகிறான். இந்த இடத்தில், இந்திரனிடம் தயை இருந்தது; வீரம் இல்லை. அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சத்ய சாயிபாபாவிடம் சரணடைய வேண்டும்; கர்மயோகம், பக்தி யோகம் இருந்தால், ஞானயோகம் பெறலாம்; சரணாகதி அடையலாம்.கஜேந்திர மோட்சத்தில், விஷ்ணுவுக்கு தினமும் யானை ஒன்று, மலர்களால் பூஜை செய்வது வழக்கம். ஒருநாள் காலையில், பூஜை செய்து கொண்டிருந்தபோது, குளத்து தண்ணீருக்குள் இருந்த முதலை, யானை காலை பிடித்து உள்ளே இழுக்கிறது. யானை கதறுகிறது; விஷ்ணு ஓடி வந்து யானையை காப்பாற்றுவதோடு, சாபத்தால் முதலை உருவம் பெற்ற அரக்கனுக்கு மோட்சமளிக்கிறார். யானை கேட்கிறது, "தினமும் உனக்கு பணிவிடை செய்வது நான்; அவனுக்கு எதற்கு மோட்சம், என்க; அதற்கு விஷ்ணு சொல்கிறார், "அது உனது காலை பிடித்து விட்டது. பக்தன் காலை யார் பிடித்தாலும், அவர்களுக்கு மோட்சம் உண்டு, என்கிறார். சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும்; அது கடவுளுக்காக செய்வதாக எண்ண வேண்டும். உண்மையான பக்தனுக்கு என்றும் மோட்சம் உண்டு. பகவானுக்கு பிடித்ததை மட்டும் செய்ய வேண்டும்; பிடிக்காத எதையும் செய்யக்கூடாது; நீதான் இலக்கு, நீதான் என் வழி என பகவானை நம்ப வேண்டும்.இவ்வாறு, வாசுதேவன் பேசினார்.