பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
ஜம்மு: அமர்நாத் குகைக் கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான, அமர்நாத் யாத்திரை, நேற்று முன்தினம் துவங்கியது. ஜம்முவிலிருந்து, நேற்று, 3,000 யாத்ரீகர்கள் பயணத்தை துவக்கினர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம். ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், பனியால் சூழ்ந்திருக்கும் குகையில், சில மாதங்கள் மட்டுமே, பனி விலகியிருக்கும். அந்த காலத்தில், லட்சக்கணக்கானோர், பனி லிங்கத்தை தரிசிப்பதை, புனிதமாக கருதுகின்றனர். இந்த மாநிலத்தின், பகல்ஹாம் மற்றும் பால்டால் ஆகிய இடங்களில் இருந்து, தலா, 7,500 வீதம், தினமும், 15 ஆயிரம் பேர் அமர்நாத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர். ஜம்மு நகரிலிருந்து, நேற்று, 96 வாகனங்களில் புறப்பட்ட, 3,000 யாத்ரீகர்களை, மாநில சுற்றுலா அமைச்சர், ஜி.ஏ.மிர் வழியனுப்பி வைத்தார். பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால், ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள், யாத்திரை செல்லும் வழியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஆண்டு, ஆறு லட்சம் பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்; அவர்களில், 130 பேர், விபத்து, உடல் நலக்குறைபாடு போன்ற காரணங்களில் இறந்தனர்.