பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
11:07
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஓம் நமசிவாய,ஹரி ஓம், ஜெய்மா போன்ற கடவுள் நினைவை ஏற்படுத்தும் மந்திர வார்த்தைகளை முதலில் கூற வேண்டும். பிறரிடம் ஆன்மிக விஷயங்களை பேசுவதுடன், ஓய்வுநேரங்களில் மந்திரங்கள் ஜபிக்கவும், ஆன்மிக நூல்களை படிக்கவும் பழகிக் கொள்ளுங்கள். அனைவரது நன்மைக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். குறிப்பாக, நமக்கு இன்னல் செய்பவர்களுக்கும் நல்ல உள்ளத்தை அளிக்குமாறு பிரார்த்தியுங்கள்.
வாழ்க்கை சுமைகளை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு உதவும் மனப் பான்மையுடன் வாழ்ந்தால் கவலையும் இருக்காது. படைத்தவன் இருக்கிறான், எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான் என நம்புங்கள். புயலில் பெரும் மரங்கள் சாயும். கட்டடங்கள் இடியும், ஆனால், பெரும் புயலால் புல் பாதிக்கப்படுவதில்லை. வளைந்து கொடுத்து தப்பி விடுகிறது. பணிவின் பெருமையை அறிந்து வாழ வேண்டும். சுயநலம், பொறாமை, அகங்காரம் போன்ற விரும்பத்தகாத இயல்புகளில்இருந்து முற்றிலும் விடுபட்டால் இறைவனைக் காணலாம். இனிப்பான கற்கண்டை விழுங்கினால் தொண்டையில் காயம் ஏற்படும். மெல்ல சுவைத்து உண்கிறோம். அதுபோல் இறைக்காட்சிக்கு குறுக்கு வழி இல்லை.
உலகை வென்றுவிட்டதாக மனிதன் கூறுகிறான், ஆனால், அவன் காலடியிலுள்ள மணல் துகள்களை கூட எண்ணும் ஆற்றல் இல்லை. வாழ்க்கைக்கு அகங்காரம் தேவையற்றது. கடல் அலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கரை இருக்கிறது. ஆன்மிக வாழ்வில் விரதங்கள் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்துகின்றன. மனம் சஞ்சலப்படும் போது மந்திர ஜபம் செய்யலாம், இறைநினைப்பும், ஜபமுமே மன அமைதி தரும். ஆன்மிக நூல்களையும் படிப்பது நல்லது. நீர்நிலையிலுள்ள செடி கொடிகளை அகற்றினால் எளிதாக படகைச் செலுத்த முடியும். அதுபோல் மனதிலுள்ள மாசை ஜபத்தின் மூலம் நீக்கினால் தியானம் சுலபமாகக் கைகூடும்.
பக்தியின் பலனைப்பெறுவது வேரிலிருந்தே பலாப்பழம் கிடைப்பது போன்றது. மற்ற கனிதரும் மரங்களில், உயரத்தில் ஏறினால் தான் பழங்களைப் பெற முடியும். பூட்டைத் திறக்க முடியவில்லை என்றால் திறக்கும் தொழிலாளியைக் கூப்பிடுகிறோம். விருப்பு, வெறுப்பு என்னும் பூட்டைத் திறப்பதற்குரிய சாவிஇறைவனிடம் இருக்கிறது. கோயிலில் கடவுளை வழிபடும் போது, அவருக்கு காட்டப்படும் கற்பூர ஆராதனையைக் காணும் போதும் நம் மனம் ஒருமுகப்படுகிறது, அமைதி அடைகிறது. -அமிர்தானந்தமயி