பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சென்னை: ஈகை மாதமான ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, முஸ்லிம்களின், ஒரு மாத நோன்பு இன்று துவங்குகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில், 9வது மாதம், ரம்ஜான் மாதம். இது ஈகை மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், சூரிய உதயத்திற்கு சற்று முன் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை, நாள் தோறும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர். அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பின்படி, ஒரு மாத ரம்ஜான் நோன்பு இன்று துவங்குகிறது. ஒரு மாத நோன்பு முடியும் நாளில், ரம்ஜான் விழா கொண்டாடப்பட உள்ளது.
ரமலான் சிந்தனைகள்: மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்!
புனித ரமலான் நோன்புகாலம் துவங்கி விட்டது. இறை நம்பிக்கையாளர்களின் உள்ளம் பூரித்துப் பொங்கியிருக்கிறது. பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி ஓடுகிறது. இந்த மாதத்தை "கண்ணியம் நிறைந்த மாதம் என்றார்கள் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். "ஷஹ்ரே அஜீம் என்று அவர்கள் குறிப்பிட்டது இதைத்தான். அது மட்டுமா! "ஷஹ்ரே முபாரக் என்றும் அவர்கள் இம்மாதம் பற்றி சொல்கிறார்கள். இதற்கு "இது அருள் வளம் நிறைந்த மாதம் என்று பொருள். இந்த மாதத்தில் மகத்தான இரவு ஒன்று வருகிறது. அந்த இரவின் மகத்துவம் அளவிடற்கு அரியது. "ஆயிரக்கணக்கான மாதங்களுக்கான அருள்வளத்தின் புதையல் என்று அந்த இரவைச் சொல்வார்கள். அந்த இரவில் தான் இறைவன் தன்னுடைய மிகப்பெரும் அருளை இறக்கி வைத்தான். ""நாம் இதனை- தெளிவான வேதத்தினை- அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த இரவு பற்றி தான். அதே நேரம், இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமானதே. ஒவ்வொரு இரவும் அருள்வளம் மிக்கதே. இந்த அரியமாதத்தில், ஏக இறைவனைப் பிரார்த்தித்து, மகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்குவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20