பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இரட்டை திருமாளிகை மதில் சுவர் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்தது ஏகாம்பரநாதர் கோவில். இக்கோவில், 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் இக்கோவிலில், திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டு உள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முன், கரிகாலச் சோழன் ஏகாம்பரநாதர் கோவிலை புதுப்பித்து கட்டியுள்ளார். இதற்கான சான்று, அவர் ஏகாம்பரநாதரை கைகூப்பி வணங்கும், கற்சிலை கோவில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில், கோவில்கள் செங்கற்களாலும், மரத்தாலும் கட்டப்பட்டன. பல்லவ அரசர்கள் கோவில்களை புதுப்பித்து கருங்கற்களால் கட்டினர். பின்னர், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் கி.பி.1509ம் ஆண்டு ராஜகோபுரம், வெளிபுற மதில்சுவர், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றை கட்டிஉள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இரட்டை திருமாளிகை மதில்சுவர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதை, சீரமைக்க, 13வதுநிதிக்குழுவில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடியும் என, இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.