பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
கும்பகோணம்: திருநாகேஸ்வரத்தில் அடிக்கடி போக்குவரத்து மாற்றம் செய்வதால் சிரமத்திற்கு உட்படும் மக்கள் பழைய நிலையே தொடரவேண்டும் என கோரி வருகின்றனர். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவானுக்கு ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் அருகில் தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதிசுவாமி கோவில் உள்ளது.திருப்பதி பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும் சிறப்புபெற்ற தலம் என்பதால் இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அரைகிலோ மீட்டர் தொலைவில் அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கும் பக்தர்கள் செல்கின்றனர். அமாவாசை நிகும்பலா யாகம் இங்கு பிரசித்திபெற்றது.
புகழ்பெற்ற மூன்று கோவில்களுக்கும் செல்ல பக்தர்கள் திருநாகேஸ்வரம் வந்து செல்கின்றனர். கார், வேன், பஸ் என பல வாகனங்களில் வந்து செல்வதால் திருநாகேஸ்வரம் கடைவீதி அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது. போலீசாரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் வணிகர்கள், முக்கிய பிரமுகர்களை, போலீஸார் அழைத்து போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் வண்ணம் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின்படி பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகின்ற வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கும்பகோணத்திலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் கடைவீதி வழியாக ஒப்பிலியப்பன் கோவில் மார்க்கம் செல்வதென்றும், ஒப்பிலியப்பன்கோவில் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் தெற்குவீதி, மேலவீதி வழியாக கடைவீதி வராமல் கும்பகோணம் செல்வது என்றும் முடிவு செய்து அதன்படி செயல்படுத்தப்பட்டது. காரைக்கால் மார்க்கம் செல்லும் பஸ்களும், காரைக்கால் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்களும் வழக்கம்போலவே செல்லும்படி முடிவு செய்யப்பட்டது. இது திருநாகேஸ்வரம் பகுதி மக்களுக்கும், பக்தர்களுக்கும், வணிகர்களுக்கும் வசதியாகவே இருந்தது.
அரசுப்போக்குவரத்து கழகம் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்து கடந்த சில நாட்களாக கும்பகோணத்திலிருந்து வரும் பஸ்கள் மேலவீதி, தெற்குவீதி வழியாக ஒப்பிலியப்பன்கோவில் மார்க்கம் செல்வதென்றும், ஒப்பிலியப்பன்கோவில் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் கடைவீதி வழியாக கும்பகோணம் செல்வதுமாக மாற்றப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் வரும் மக்கள் மேலவீதியில் இறங்கி புதுத்தெரு, சன்னாபுரம் செல்லவேண்டி இருப்பதால் தனியாக ஆட்டோ பிடித்துச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடைவீதியிலிருந்து அரைகிலோ மீட்டர் தூரம் கொண்ட சன்னாபுரம், மேலவீதியில் இறக்கிவிடப்படுவதால் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மக்கள் பழையபடியே போக்குவரத்து நடைமுறையை செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு பலரும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருநாகேஸ்வரம் மக்கள், வணிகர்கள், பக்தர்கள் நலன் கருதி பழைய படியே போக்குவரத்தை செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.