அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றம்: 22ல் தேரோட்டம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2013 10:07
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஜூலை 22ல் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.இக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேரோட்ட திருவிழா நேற்று காலை துவங்கியது. காலை 9.30 மணிக்கு தங்கப் பல்லக்கில் அனுமார் உருவம் பதித்த கொடியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 10.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார். தினமும் இரவு பல்வேறு வாகனங்களிலும், ஜூலை 20ல் புஷ்ப சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஜூலை 18ல் காலை 8.15 மணிக்கு பல்லக்கில் புறப்படும் பெருமாள் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 9.30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 22ல், காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோட்டைவாசல் வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூலை 23ல் திருவிழா சாற்று முறையும், ஜூலை 24ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.