பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி, சூலூர் சுற்றுவட்டார கிராம கோவில்களில், சமீப காலமாக திருட்டுகள் அதிகரித்துள்ளன. திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சூலூர் சுற்றுவட்டாரத்தில் நீலம்பூர், பொன்னாண்டம்பாளையம், அன்னூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள, கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. கிராமக்கோவில்களை பகலில் நோட்டமிடும் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள், இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைந்த பிறகு, கோவிலுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர். கோவில்களில் சாமிக்கு அணிவித்து இருக்கும் நகைகள், பீரோவில் உள்ள வெள்ளி பொருட்கள், உண்டியல் பணம் என எதையும் விட்டு வைப்பதில்லை. கடந்த ஒரு வாரத்துக்கு முன், நீலம்பூர் ஆச்சான் குளம் அருகில் உள்ள வேடசாமி கோவில் மற்றும் அவிநாசி மெயின் ரோட்டில் உள்ள முனியப்பசாமி கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபோல், அன்னூர் ரோட்டில் உள்ள வரப்பிள்ளையார் கோவிலிலும் உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர். அன்றிரவே பொன்னாண்டம்பாளையத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவிலில் திருட முயன்றுள்ளனர். மேற்கண்ட இடங்களில் போலீசார் வந்து விசாரித்து சென்றதோடு சரி. வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் வேலாத்தாள் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க மூக்குத்தி, கம்மல்களை திருடி உள்ளனர். உண்டியலை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும், பீரோவை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தையும் திருடியுள்ளனர்.
வழக்குப்பதிவு செய்ய தாமதம்: கிராமக்கோவில்களில் பணம், நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து, அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் சூலூர், கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. "அனைத்து பகுதிகளிலும் இரவு ரோந்துப்பணியை போலீசார் அதிகரிக்கவேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து, கோவில் திருட்டுகளை தடுக்கவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.