பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்த தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெரியபாளையம் அடுத்த, பெருமுடிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வாரத்தில், 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த, 10ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை, உற்சவர் துஜா வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மறு நாள் உற்சவர் அம்ச வாகனத்தில் எழுந்தருளினார். கடந்த, 12ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நாக வாகனம், சந்திப்பு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் தேர்த் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர். நேற்று இரவு உற்சவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று கொடி இறக்க நிகழ்ச்சியும், நாளை பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை தர்மகர்த்தா சம்பத்ராம ஐயங்கார் மற்றும் கிராம பெரியோர்கள் செய்தனர்.