பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், 5 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அரசு வெளியிட்ட அறிவிப்பு, கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில், கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளன. இக்கோவிலில், ராமானுஜர் சுவாமிக்கு, ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில், உற்சவமும், ஆண்டுதோறும் சித்திரை மாதம், ஆதிகேசவ பெருமாளுக்கு பிரம்மோற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
அறிவிப்பு: திருவாதிரை உற்சவம் மற்றும் பிரம்மோற்சவ நாட்களில், வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வதால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், கடந்த 2012-13ம் நிதியாண்டு, மானியக் கோரிக்கையில், 5 கோடி ரூபாய் ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேம்பாட்டு பணி: இதில், சுற்றுலா தகவல் மையம், ஓய்வுக் கூடம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, மின் விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோவில் குளம் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, மேம்பாட்டு பணிகள் கலந்தாய்வு கூட்டம், கடந்த ஆண்டு, ஜூலை 10ம் தேதி, சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் தலைமையில் நடந்தது. இதில், அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், வளர்ச்சி பணிகள் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியிட்டு, 15 மாதங்களாகியும், கோவில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
பக்தர்கள் தவிப்பு: தற்போது, கோவில் வளாகத்தில், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, தங்கும் விடுதி போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, பக்தர்கள் தவித்து வருகின்றனர். மேலும், புனிதமாக கருதப்படும் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. திருக்குளத்தில் படிந்துள்ள பாசிகளால், பக்தர்கள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, கோவில் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவிலில், வளர்ச்சி பணிகள் செய்ய, பணி தேர்வு நடைபெற்றது. இதற்காக, தனியார் ஒப்பந்ததாரர் மூலம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.