பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், ஆடி ஒன்றாம் தேதியை முன்னிட்டு, நேற்று புதுமண தம்பதிகள், பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட, குறைந்து காணப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில், காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிப்பதால், முக்கூடல் சங்கமம் என்றும், கூடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு அடுத்தப்படியாக இக்கோவில் கருதப்படுவதால், பரிகார ஸ்தலம், புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் கருதப்படுகிறது.ஆடி ஒன்றாம் தேதியை முன்னிட்டு, கூடுதுறையில் புதுமண தம்பதிகள், பக்தர்கள் கூட்டம் மிக குறைந்து காணப்பட்டதால், காலை முதலே கோவில் பின் பகுதியில் உள்ள கூடுதுறை படித்துறை, இரட்டை விநாயகர் கோவில், சங்கமேஸ்வரர் கோவில், வேதநாயகி கோவில், பெருமாள் கோவில் போன்ற பல இடங்களிலும், கோவில் வளாகத்திலும் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.நரசிம்மன் என்ற ராஜா ஐயர் கூறியதாவது:ஆடி ஒன்றில், புதுமண தம்பதியர்களுக்கு சிறப்பான பண்டிகையாகும். புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், மணமகள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு, தாலி பிரித்து கட்டும் நிகழ்ச்சி நடத்துவர்.ஆண்டு தோறும் சங்கமேஸ்வரர் கோவிலில் புதுமணத்தம்பதிகள் உட்பட கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக, கூடுதுறையில் குளித்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்தாண்டு கூட்டம் மிக குறைந்து காணப்படுகிறது.தவிர, ஆடி ஒன்றில், பல ஊர்களில், சிவனை போல மூன்று கண் உடைய தேங்காயை உரைத்து, அதற்குள்ளே தானியங்கள் அடைத்து, தீயினால் சுட்டு, வெடிக்கச் செய்து, சாப்பிட்டு மகிழ்வர், என்றார்.