பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
உடுமலை: உடுமலை அருகே, கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில், கி.பி., 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிலை மற்றும் அணிகலன் உற்பத்தி கல்லை, தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, கரூர் வரை செல்லும் அமராவதி நதி கரையில், தொன்மையான நாகரிகம் இருந்தது, பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், உடுமலை அருகேயுள்ள, கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் பண்டைய காலத்தில், அணிகலன்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட கல் இயந்திரத்தை, தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.இக்கிராமத்தில் உ ள்ள கரும்புத் தோட்டத்தில், மேல்பகுதியில், கூம்பு வடிவத்திலான கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கல்லின் இரு புறங்களும், அணிகலன் உற்பத்திக்காக தேய்க்கப்பட்டு, தேய்மானம் அடைந்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர் ரவி மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் குடிமங்கலம் சதாசிவம் கூறியதாவது: கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில், நத்தமேடு எனும் பகுதியிலுள்ள கரும்பு தோட்டத்தில், 8ம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலமடைந்துள்ள நந்தி சிலைக்கு, அடிப்பாகத்திலிருந்த கற்கள், அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. கற்களில், கி.பி., 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன. இப்பகுதியில், மூன்று கிலோ எடையுள்ள, அரைவட்ட வெங்கக் கல் கிடைத்தது. இந்தக்கல், பல்வேறு அணிகலன்கள், குறிப்பாக, கண்ணாடி மணிகள் செய்ய பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், அங்குள்ள நடுகல்லில், இப்பகுதி வணிக மையமாக இருந்ததும், கண்ணாடி பொருட்கள் வணிகம் காரணமாக கிராமத்திற்கு கண்ணாடிப்புத்தூர் என, பெயர் வைத்ததும், குறிப்பிடப்பட்டு உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த, அமராவதி நதிக்கரை நாகரிகத்தை வெளிக்கொணர, கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.