பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே, இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில், ஆடி திருவிழா துவங்கியது. இங்குள்ள பரதன் கோயில் உட்பட அருகில் உள்ள கோயில்களில், "நான்கு கோயில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.கேரளாவில் ஆடி மாதம், ஆன்மிக மாதமாக கருதப்படுகிறது. இதனை "ராமாயண மாதம் என்று அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம், ராமாயணம் வாசிக்கப்படும். அம்மன்கோயில்கள் போன்று, ராமர், பரதன், லட்சுமணன், சத்ருகனன் சுவாமிகளிலும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நான்கு கோயில்களையும், ஒரே நாளில் தரிசனம் செய்வது "நாலம்பல தரிசனம்(நான்கு கோயில் தரிசனம்) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது, புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
திருச்சூர் அருகே திருப்பறயாரில் உள்ள ராமர், இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் உள்ள பரதன், எர்ணாகுளம் மாவட்டம் முழிக்குளத்தில் உள்ள லட்சுமணன், திருச்சூர் பாயம்பலத்தில் உள்ள சத்ருகனன் கோயில்களில் ஒரே நாளில் சுவாமி தரிசனம் செய்ய, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒரு மாதம் இந்த சிறப்பு தரிசனம் நடக்கும்.இந்த கோயில்களில் தீபவழிபாடு, அவல் பாயாச வழிபாடு, வெடி நேர்ச்சை வழிபாடு, புஷ்பாஞ்சலி போன்றவை பிரபலமானது.
அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், கோயில்கள் திறந்து இருக்கும்.இரிஞாலக்குடா பரதன் கோயில் பூஜை விபரங்கள் அறிய, 0480- 282 2631. கேரள அரசு போக்குவரத்துக்கழகம், காலை 6 மணிக்கும், 6.30 மணிக்கும் இங்கிருந்து, நான்கு கோயில்களையும் இணைத்து பஸ்களை இயக்குகிறது. தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. திருச்சூர்-கொடுங்கல்லூர் நெடுஞ்சாலையில் இரிஞாலக்குடா உள்ளது.