பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
04:07
* காலையில் நீராடி சிலர் பூஜை செய்வர். வாய் பகவந்நாமாவையோ, மந்திரத்தையோ ஜெபித்துக் கொண்டிருக்கும். ஆனால், மனம் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருக்கும். வழிபாடு என்பது மனதை, முழுமையாக இறை சிந்தனையில் ஈடுபடுத்துவது தான்.
* வாழ்வில் இன்பதுன்பம் மாறி மாறி உண்டாகலாம். இறைவன் எப்போதும் நமக்குத் துணை இருப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையே,செயலாற்றத் தேவையான ஊக்கத்தை உங்களுக்கு வழங்கிவிடும்.
* அரிசிமாவு ஒன்று தான். ஆனால், அதில் எத்தனையோ விதமான பலகாரம் செய்து சாப்பிடுகிறோம். அவற்றின் பெயரும், சுவையும் மாறுபடுகின்றன. அதுபோல, மூலப்பரம்பொருள் ஒன்று தான். அவரே பலவித வடிவம், பெயர் தாங்கி கோயில்களில் அருள்பாலிக்கிறார்.
* பட்டம் பெற்றவர்கள் அனைவரும் உயர்பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லோருடைய எண்ணமும் நிறைவேறுவதில்லை. அதற்காக கல்வி கற்றுத் தந்த ஆசிரியரையோ, கல்விக்
கூடத்தையோ குறை சொல்லிப் பயனில்லை. படித்ததைப் பயனுள்ளதாக்கும் முயற்சியை நாம் தான் செய்ய வேண்டும்.
* மனிதனின் கடைசி மூச்சு பிரியும் போது கூட பகவானின் நாமத்தைச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரம் நமக்கு கட்டளையிடுகிறது. அந்த பழக்கம் ஒருநாளில் வந்துவிடாது. இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே இந்நிலையை அடைய முடியும்.
* உங்கள் குழந்தையை கிருஷ்ணா, கோபாலா, கண்ணா என்று அழைத்து மகிழுங்கள். கூப்பிடும் போதெல்லாம் அந்த கண்ணனையே அழைப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இப்படி பத்துமுறை அழைத்தால் போதும். அதுவே பஜனையாகி விடும்.
* தீர்த்த ஸ்நானம், மவுனவிரதம்,
தியானம் என்று சிரமப்பட்டுத் தான்
கடவுளை அடைய வேண்டும் என்ற அவசியமில்லை. கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொல்வது ஒன்றே போதுமானது. எங்கேயும்,எப்போதும் இதனைச் செய்யலாம். பக்தி மட்டும் அவசியம்.
* கடவுளிடம் நமக்கு வேண்டியதை
உரிமையோடு கேட்டுப் பெறுவதில் தவறு ஒன்றுமில்லை. குழந்தை தன்
தாயிடம் கேட்பதுபோலத் தான் இதுவும். கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கடவுளைப் பழிப்பது கூடாது.
* நமக்கு என்ன தகுதியோ அதை
நிச்சயம் கடவுள் அருள்வார் என்ற உறுதியான எண்ணம் நமக்கு இருந்தால் பக்திமார்க்கத்தில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டோம்.
* கேட்டதையெல்லாம் கடவுள் நமக்கு வழங்கத் தொடங்கி விட்டால், அதுவும் நமக்கு ஆபத்து தான். தொட்டதை எல்லாம் சாம்பலாக்கும் பஸ்மாசுரனே இதற்கு உதாரணம்.
* பழங்காலத்தில் நம் முன்னோர் காட்டுக்குச் சென்று தவம் செய்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் நம்மால் அப்படி செய்ய இயலாது. இருந்தாலும் அதே தவத்தை நாமசங்கீர்த்
தனத்தில் பெறமுடியும். இயன்றவரை பஜனை பாடுங்கள். இல்லாவிட்டால் கேட்கவாவது செய்யுங்கள். கால மாற்றத்துற்கு ஏற்ப நடைமுறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* சரியான செயலைச் செய்ய முயல வேண்டும். தவறிச் செய்தால், தவறுக்கு
தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-சொல்கிறார் ஹரிதாஸ்கிரி சுவாமி