கரூர்: கரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்டரிநாதன் ஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம், கருவறையை தொட்டு தரிசிக்கும் விழா சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பாண்டு, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கோவிலில் துக்காரம் கொடி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.நேற்று அதிகாலை ஆஷாட ஏகாதசி மகோற்சவம் நடை பெற்றது. தொடர்ந்து பாதுகை சேவை என்ற பெயரில், ஸ்ரீ ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரி நாதன் மூலவர் பாதத்தை தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஏராள மான பக்தர்கள் மூலவர் சிலையை தொட்டு வணங்கினர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குணசேகரன், விழா அமைப்பாளர்கள் மேலை பழனியப்பன், ஜெகநாதன், மோகன்ராம், சந்தான கிருஷ்ணன், முத்துராமன், வெங்கட்ராமன், சிவசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.