வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு திருக்கல்யாணம் நடக்கிறது.கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று வடமதுரை சி.ஏ.வி., காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் இ.என்.பழனிச்சாமியின் ஆறாம் நாள் மண்டகப்படியில், யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. வேலாயுதன் குழுவினரின் சென்டை மேளக் கச்சேரியும், வாணவேடிக்கையும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் தாயார் சன்னதியில் இன்றிரவு நடக்கிறது. வரும் 22ம் தேதி தேரோட்டமும், 24-ம் தேதி வசந்தம் முத்துபல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் அறிவழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.