நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழா 31ம் தேதி கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2013 10:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர வளைகாப்பு முளைகட்டுத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா காந்திமதி அம்பாள் சன்னதியில் வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஆக.3ம் தேதியன்று திருவிழாவின் 4ம் நாளில் பகல் 12 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆடிப்பூர வளைகாப்பு நாளில் அம்பாளை மனமுருக வேண்டி வளையல்களை காணிக்கையாக செலுத்துவதும், அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை வாங்கிச் சென்று அணிந்து கொள்வதும் ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று கம்பர் சமுதாயம் சார்பில் சிறப்பு மேளம், நாதஸ்வர கச்சேரி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யயப்படுகிறது. வளைகாப்பு உற்சவ நாளில் இரவு 7 மணிக்கு ரிஷிப வாகனத்தில் காந்திமதி அம்பாள் உட்பிரகாரத்தில் வீதியுலா வருதலும், 10ம் திருநாளில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு ஆடிப்பூர முளைகட்டு சிறப்பு வைபவமும் நடக்கிறது. இந்நாளில் பெண்கள் விரதமிருந்து நவதானியங்களை முளைப்பாரியாக எடுத்து, சீர் பட்சணங்களை எடுத்துவந்தும் காந்திமதி அம்பாளுக்கு மடி நிரப்புகின்றனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்துள்னர்.