கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2013 10:07
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவை சேர்ந்த கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் தமிழகத்தின் தென்பழனி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மேலும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பவுர்ணமி கிரிவலம் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதாகும். தவிர திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத பக்தர்களில் பெரும்பாலானோர் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் மலைக்குன்றை சுற்றி நடைபெறும் கிரிவலத்தில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இம்மாத பவுர்ணமியில் நடந்த கிரிவலத்தை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மேற்கு வாசலில் துவங்கிய பவுர்ணமி கிரிவலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா என்ற பக்தகோஷத்துடன் மலைக்குன்றை சுற்றி வந்தனர். மேலும் கழுகுமலை பஸ் ஸ்டாண்ட் ரோடு, கிரிப்பிரகார வீதி மேற்கு மற்றும் கிழக்கு, இந்திரபிரஸ்தம் தெரு, அனந்தம்மன் கோயில் தெரு, கீழபஜார், அரண்மனை வாசல் தெரு வழியாக சென்று தெற்கு வாசலில் முடித்தனர். தவிர பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, மூன்று மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.