பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
சென்னை: தமிழகத்தில், ஜாதிகளிடையே நிலவிய, ஏற்றத்தாழ்வினை எதிர்த்து போராடி வரும், தமிழின ஒற்றுமைவாதிகளின் கேடயமாக பெரியபுராணம் பயன்படுகிறது, என, ஐகோர்ட் நீதிபதி, வாசுகி பேசினார்.21ம் ஆண்டு விழாசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின், 21ம் ஆண்டு, சேக்கிழார் விழா நடந்தது. அதில், சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர், முன்னாள் நீதிபதி, நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில், சேதுராமன் எழுதிய, "தேவாரத்தில் தொன்மம் நூல் வெளியிடப்பட்டது. நீதிபதி நடராஜன் வெளியிட, வெங்கடேசுவரன் பெற்றுக் கொண்டார்.இதில், ஐகோர்ட் நீதிபதி, வாசுகி பேசியதாவது: தமிழுக்கு பல புதிய வார்த்தைகளை தந்தவர், சேக்கிழார். இல்லாள் என்ற வார்த்தைக்கு, இல்லாளன் என்ற ஆண்பால் வார்த்தையை தந்தார். பெரியபுராணத்தில், நீதி, நியாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ஐந்து முக்கிய வழக்குகளை காணலாம்.
மனுநீதி சோழனின் மகன் மீது, பசு தொடுத்த வழக்கு; சுந்தரர் மீதான கிழ வேதியரின் அடிமை வழக்கு; திருநீலகண்ட நாயனாரின் திருவோட்டு வழக்கு; தண்டியடிகளின் மாற்று சமயத்தவர் மீதான, நில அபகரிப்பு வழக்கு; அமர்நீதி யாரின் கோவண பிரச்னையால், உருவான வழக்கு. இவ்வாறாக, உரிமை மீறல் வழக்கு, உரிமை வழக்கு, குற்ற வழக்கு, பெரியபுராணத்தில் பேசப்படுகிறது.உள்ளத்தை கவர்ந்தவர்மனுநீதி கண்ட சோழனின் வரலாற்றில், நீதி நெறிமுறை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என, புதுமை காட்டினார். ஆத்திகர் உள்ளத்தை மட்டுமல்ல; நாத்திகர் உள்ளத்தையும் கவர்ந்தவர், சேக்கிழார். "மானமிகு என்ற வார்த்தையை நாத்திகர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு, பெரியபுராணத்தில் அவர் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில், ஜாதிகளி டையே நிலவிய, ஏற்றத் தாழ்வினை எதிர்த்து போராடி வரும், தமிழின ஒற்றுமைவாதிகளின் கேடயமாக பெரிய புராணம் பயன்படுகிறது. காந்தியடிகள், பெரியபுராண நந்தனார் சரித்திரத்தை சொல்லி, தீண்டாமை பிரசாரம் மேற் கொண்டார். இவ்வாறு அவர் பேசினார்.