பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
திருச்சி: மழைபெய்ய வேண்டியும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடவும் காவிரி ஆற்றில் நதிநீர் பூஜை நடத்தப்பட்டது.உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பரத்வாஜ சுவாமிகள், திருச்சியில் முகாமிட்டு பல்வேறு பூஜைகளை செய்து வருகிறார். நேற்று, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், 5,000 ருத்ராட்ச மாலைகளை அணிந்து சிறப்பு பூஜை நடத்தினார்.தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடவும், விவசாயம் செழிக்கவும் காவிரி ஆற்றில் நதிபூஜை நடத்த, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் வந்தார். படித்துறையில் கஜபூஜை நடத்தப்பட்டது. யானைக்கு சிறப்பு பூஜையும், மாலையும் அணிவிக்கப்பட்டது. காவிரி ஆற்றுக்குள் இறங்கி, ஆற்றில் அமர்ந்து நதி பூஜையை துவக்கிய பரத்வாஜ சுவாமிகள், ராஜராஜேஸ்வரி விக்ரஹத்துக்கும், காவிரித்தாய்க்கும் இனிப்பு வகைகள், மங்கலப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட, 64 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தார்.அபிஷேகத்தின் முடிவில், ராஜராஜேஸ்வரிக்கும், காவிரித்தாய்க்கும் தீபராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, குதிரையை வைத்து அஸ்வ பூஜை நடத்தப்பட்டது. பூஜையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.