சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சீடர் வேங்கடரமண பாகவதர். 35 ஆண்டு காலம் தியாகராஜரிடம் இசை படித்தவர். இவரிடம், ஜமீன்தார் ஒருவர் இசை படிக்க வந்தார். ஒருமுறை, வேங்கடரமண பாகவதரிடம், குருவே! தாங்கள் எனக்கு குரு. உங்கள் குரு தியாகராஜர். என் குருவின் குருவைத் தரிசிக்க வேண்டுமென எனக்கு ஆசை. அழைத்துச் செல்வீர்களா! என்றார். பாகவதரும் சம்மதித்தார். இருவரும் திருவையாறில் இருந்த தியாகராஜர் முன் சென்றனர். ஜமீன்தாரை தன் குருவிடம் அறிமுகப்படுத்தினார் தியாகராஜர். தியாகராஜரும் அவரைக் குறித்து விசாரித்து அறிந்து, தன்னோடு நாலைந்து நாட்கள் தங்கிப் போகலாமே என்றார். ஜமீன்தாரும் சம்மதித்தார். பாகவதர் மட்டும் ஊர் திரும்பி விட்டார். அங்கு தங்கியிருந்த நாட்களில் தியாகராஜ சுவாமிகள் பாடுவதைக் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார் ஜமீன்தார். இசைமழையில் நனைந்த அவர், சில நாட்கள் கழிந்ததும் தியாகராஜரிடம் விடை பெற்று கிளம்பினார். மறுநாள், பாகவதரைச் சந்தித்தார் ஜமீன்தார். அவரும் தியாகராஜருடன் இருந்த அனுபவம் பற்றிக் கேட்டார். குருவே! தியாகராஜர் நன்றாகத்தான் பாடுகிறார். ஆனால், உங்கள் குரலில் இருக்கும் ஒரு வகை ஆழமான இனிமை அவரிடம் இல்லை போல் தோன்றுகிறது, என்றார். பாகவதர் அதிர்ந்து விட்டார். அவருக்கு மிகுந்த மனவருத்தம். தன் குருவைப் பற்றி தனது மாணவர் இப்படி சொல்லி விட்டாரே என்று. ஜமீன்தாருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். இதன்பின், ஜமீன்தார் சிலர் மூலம் குருவுக்கு சமாதான தூது விட்டார். மனம் உடைந்து போயிருந்த பாகவதர், என் குருவை குறைத்துப் பேசியதை என் காதால் கேட்டதால், வாலாஜாபேட்டையிலுள்ள குருவின் படத்திற்கு முன்னால் முன்னூறு தோப்புக்கரணம் போடப்போகிறேன், என வந்தவர்களிடம் சொல்லி அனுப்பினார். ஜமீன்தாரும் அங்கே சென்று விட்டார். தன் குரு தோப்புக்கரணம் போட்டதும், இவரும் அதே போல 300 தோப்புக்கரணம் போட்டார். அதன்பின்பே, பாகவதர் ஜமீன்தாரிடம் பேசினார். தன் குரு மேல் உள்ள பக்தியை வெளிப்படுத்த, அவரது குருவைகுறைத்துப்பேசியது தவறு என்பதை உணர்ந்தார்.