பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
ஈரோடு: திருமலை பிரமோற்சவ தரிசன டிக்கெட், இந்தாண்டு வழங்கப்படாது, என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள், திருப்பதி சென்று, வெங்கடாலஜபதியை தரிசனம் செய்கின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கிளைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக, தரிசன நேரம் பதிவு செய்தல், சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் இயக்குகின்றனர்.திருப்பதியில் தரிசனத்துக்கு சென்று, ஒரு வாரம், பத்து நாள் காத்திருந்த காலம் மாறி, அதிகபட்சமாக மூன்று நாளிலும், பதிவுசெய்து சென்றால், இரண்டு மணி நேரத்திலும், சுவாமி தரிசனம் காண்கின்றனர். திருப்பதியில், தர்ம தரிசனம், சுதர்ஸன தரிசனம், வி.ஐ.பி., தரிசனம் என்ற மூன்று வழிகளில், பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சுதர்ஸன தரிசனம் பெறும் பக்தர்களுக்கு, குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, அந்நேரத்திலேயே ஸ்வாமியை தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுவர்.ஆண்டுதோறும் திருமலை பிரமோற்சவ விழா, ஒன்பது நாட்கள் வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம். அன்றைய தினங்களில், உலகின் பல பகுதிகளில் இருந்தும், தினமும் பல லட்சம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்வர். இந்தஆண்டு, நவராத்திரி விழாவின் போது, கவுன்டர்களில் சுதர்ஸன டிக்கெட் வழங்கப்படமாட்டாது.இதுகுறித்து ஸ்ரீவாரி டிரஸ்ட் பொறுப்பாளர் உமாபதி கூறியதாவது: திருமலையில் ஸ்ரீனிவாஸ பெருமாளுக்கு புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி விழாவில், பல பகுதியில் இருந்தும், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.இந்தாண்டு பிரம்மோற்சவ சுதர்ஸன டிக்கெட்டுக்கள் வழங்கப்படாது, என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், சேவா டிக்கெட்டுகள், தங்கும் வசதிகளும் பக்தர்களுக்கு வழங்கப்படமாட்டாது என, தேவஸ்தான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர், என்றார்.