பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
பேரூர்:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு நேற்று நடந்தது. ஆடிக்கிருத்திகை நாளன்று, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, தங்கமயில் வாகனத்தில் கோவிலைச்சுற்றி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோபூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பாலாபிஷேகம் செய்யப்பட்டது; 6.00 மணிக்கு சுப்ரமணியசுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சமேதரராக தங்கமயில் வாகனத்தில் அலங்கார கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். மாலை 5.00 மணிக்கு, சாயரட்சை பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, 6.00 மணிக்கு மேல், தங்கரத புறப்பாடு, சுப்ரமணியர் திருவீதி உலா நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம், பால் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். பேரூரில் சிறப்பு வழிபாடு: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பாலதண்டபாணி சுவாமி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.