பதிவு செய்த நாள்
02
ஆக
2013
10:08
காங்கயம்:காங்கயம் தாலுகாவில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 6,423 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிலங்களை மீட்க, தனி குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காங்கயம் தாலுகாவில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகளை கொண்ட, காங்கயம் காசி விஸ்வநாதர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், நத்தக்காடையூர் ஜெய கண்டீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில், மருதுரை பட்டீஸ்வரர் கோவில், அகிலாண்டபுரம் அகத்தீஸ்வரர் கோவில், காடையூர் காடையீஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில், பரஞ்சேர் வழி மத்யபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.பழங்காலத்தில், இக்கோவில்களே, ஆட்சி நிர்வாகத்தின் தலைமையிடமாக இருந்தது. குளம் பராமரிப்பு, நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்துவது, வரி வசூல் செய்வது உள்ளிட்ட பணிகளும் நடந்தன. கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் முறையாக நடக்க பல்வேறு பணிகள் மேற்கொண்டு வந்த ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு, ஊதியம் கொடுக்கும் வகையில் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. கோவிலுக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில், நஞ்சை, புஞ்சை நிலங்களும் எழுதி வைக்கப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.கோவில் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, கோவில்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளன. முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டுள்ளன. போலி ஆவணம் தயாரித்தும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.காங்கயம் தாலுகாவில் உள்ள கோவில்களுக்கு மட்டும் 6,423 ஏக்கர் நிலங்கள் உள்ளதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்க தனி குழு அமைக்கப்படும் என 10 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்தார். ஆவணங்களை தேடிப்பிடித்த அதிகாரிகள், அவற்றை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர். 6,423 ஏக்கர் நிலத்தில், அறநிலையத்துறை வசம் சொற்ப அளவிலான நிலங்களே உள்ளன. மீதமுள்ள நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாலும், முறைகேடுகள் மூலமும் அபகரிக்கப்பட்டுள்ளன. பழைய ஆவணங்கள் அடிப்படையில் கோவில் நிலங்களை மீட்க, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட அதிகாரமிக்க தனி குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.