பதிவு செய்த நாள்
02
ஆக
2013
10:08
சென்னை : விட்டல் ருக்மணி சமஸ்தான் தலைவர் விட்டல் தாஸ் மகராஜ் தலைமையில், கோ சாலை கட்டுவதற்காக, 10 நாள் நாம சங்கீர்த்தனம், நேற்று (ஆக., 1ம் தேதி) துவங்கியது. சென்னை, காமராஜர் அரங்கில், 10ம் தேதி வரை நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து, விட்டல் ருக்மணி சமஸ்தான் தன்னார்வ தொண்டர்கள் கூறியதாவது: கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தாபுரத்தில், விட்டல் ருக்மணி சமஸ்தான் உள்ளது. இங்கு, விட்டல் ருக்மணி கோவிலும் உள்ளது. பசுக்களை வதை செய்வதைத் தடுக்க, விட்டல் ருக்மணி சமஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. அடி மாடுகளை கசாப்பு கடைக்கு செல்லாமல் தடுப்பதோடு, அவற்றை பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறது. தற்போது, 500க்கும் மேற்பட்ட பசுக்கள் சமஸ்தான் பராமரிப்பில் உள்ளன. நாளுக்கு நாள், பசுக்களின் வருகை அதிகரித்து வருவதால், நான்கு ஏக்கர் பரப்பில் புதிய கோ சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என, கணக்கிட்டுள்ளனர். கோ சாலை அமைக்கத் தேவையான நிதியைத் திரட்ட, விட்டல் தாஸ் மகராஜ், பக்தர்களை சந்திக்கும், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி, சென்னை, காமராஜர் அரங்கில், ஆக., 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில், மாலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை பஜனை நடக்கிறது. இதுதவிர, சென்னை, தியாகராய நகர், ராமகிருஷ்ணா வீதியில் உள்ள பத்மம் திருமண மண்டபத்தில், காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை, நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தப்படுகிறது. விட்டல் தாஸ் மகராஜை சந்திக்கும் பக்தர்கள், அளிக்கும் காணிக்கையைக் கொண்டு, கோவிந்தாபுரத்தில், நான்கு ஏக்கர் பரப்பில் புதிய கோ சாலை அமைக்கப்படுகிறது. மேலும், கோ சாலையிலிருந்து கிடைக்கும் மாட்டு சாணத்தைக் கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்து, விட்டல் ருக்மணி சமஸ்தானுக்குத் தேவையான மின்சாரத்தில் தன்னிறைவு அடையவும் திட்டமிட்டுள்ளோம். விட்டல் தாஸ் மகராஜ் தலைமையில் நடக்கும், நாம சங்கீர்த்தனம் நிகழ்வுக்கு அனுமதி இலவசம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.