பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
தஞ்சாவூர்: தஞ்சை மேலவீதியிலுள்ள மூலை அனுமார் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு மற்றும் 10 ஆயிரத்து 80 எலுமிச்சை பழத்தால் ஆன அலங்கார சேவை வரும் ஆறாம் தேதி நடக்கிறது. தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் வெகுபிரசித்தி பெற்றது.அமாவாசை அனுமார் எனவும் சிறப்பு பெயரிட்டு பக்தர்கள் அழைக்கின்றனர். அமாவாசை நாட்களில் 18 அகல் தீபங்களை ஏற்றி, 18 முறை மவுனமாக வலம் வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக 18 ரூபாய் உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைப்பது பக்தர்கள் வழக்கம். நினைத்தது நடக்கும் வகையில், அமாவாசை நாளில் 18, 56, 108, 1008 எலுமிச்சை பழமாலைகளை மூலை அனுமாருக்கு பக்தர்கள் சாற்றி வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை முன்னிட்டு வரும் ஆறாம் தேதி 10 ஆண்டாக பக்தர்கள் கூட்டாக சேர்ந்து 10 ஆயிரத்து 80 எலுமிச்சை பழமாலைகளை மூலை அனுமாருக்கு சாற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆறாம் தேதி காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் அமாவாசை சிறப்பு வழிபாடு துவங்குகிறது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், வறுமை, கடன் தொல்லைகளை போக்க தேங்காய் துறுவல் அபிஷேகமும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 10ம் ஆண்டாக 10 ஆயிரத்து, 80 எலுமிச்சை பழங்களால் ஆன, சிறப்பு அலங்கார சேவை, 6.30 மணிக்கு கிரிவலம் போல புகழ்பெற்ற 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில், வேண்டுதல் நிறைவேற, 56 எலுமிச்சை பழமாலைகளைக் கோர்த்து, 18 முறை வலம் வந்து மூலை அனுமாருக்கு சாற்றி, பக்தர்கள் வழிபடலாம், இதன்மூலம் நவக்கிரஹ தோஷம், வாஷ்து தோஷம் நீங்கும், விபத்து ஏற்படாது, தொழில் விருத்தியாகும் என்பது ஐதீகம். அதனால், மூலை அனுமாரை வழிபட்டு, பக்தர்கள் பயன்பெற வேண்டும் என, அமாவாசை வழிபாட்டு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன், கோவில் மேற்பார்வையாளர் அசோகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.