பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா வரும் 11ம் தேதி வெகுவிமரிசையாக துவங்குகிறது. இதற்கான ஏற்பாட்டை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். தஞ்சையிலிருந்து 5 கி.மீ.,தூரத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆவணி பிரம்மோற்ஸவ விழா வரும் 11ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் முத்துப்பல்லக்கு ஊர்வலத்துடன் வெகுவிமரிசையாக துவங்குகிறது. தொடர்ந்து, 12ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பந்தக்கால் முகூர்த்தம், 13ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் முத்துப்பல்லக்கு விடையாற்றி விழா, 15ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, பூர்வாங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. ஆவணி முதல்வாரத்தில் 16ம் தேதி காலை 8.17 மணி முதல் 10.17 மணி வரை கொடியேற்றம், 18ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, இரண்டாம் வாரத்தில் 25ம் தேதி மாலை அன்னவாகனத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆவணி மூன்றாம் வாரத்தில், அடுத்த மாதம் (செப்.,) 1ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 7ம் தேதி மாலை பெரியகாப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, 8ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 9ம் தேதி காலை, மாலை அம்மன் புறப்பாடு, 10ம் தேதி மாலை பூதவாகனத்தில் அம்மன் புறப்பாடு, 11ம் தேதி மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் ஓலைப்பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 13ம் தேதி மாலை சேஷவாகனத்தில் அம்மன் புறப்பாடு, 14ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது.இதையடுத்து, 15ம் தேதி மதியம் 3 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல், 17ம் தேதி காலை 8.45 மணிக்கு விடையாற்றி அபிஷேகம், மஞ்சள் நீர் தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கம், 29ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா, அக்., மாதம் 1ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.